Monday, October 6, 2008

தலித் பிரம்மாக்கள்!


''பதினைந்து வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜா எனது சிற்ப மையத்துக்கு வந்திருந்தார். அப்போது நான் செதுக்கிக்கொண்டு இருந்த விநாயகர் சிலை யைத் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட் டார். 'இப்போதுதான் தொட முடியும். கோயில் கருவறைக்குள் சென்றுவிட்டால் பக்தனாகிய உங்களாலும் தொட முடியாது. சிலையைச் செய்த என்னாலும் தொட முடியாது' என்றேன். சிரித்துக்கொண்டார்!''- தனது உளியைப் போலவே சிற்பி ராஜனின் வார்த்தைகளிலும் கூர்மை!

இந்தியாவின் மிகச் சிறந்த சிற்பிகளில் ஒருவர் ராஜன். சுவாமிமலை அருகே திம்மக்குடியில் இருக்கும் 'ராஜன் சிற்ப மையத்'தில் ஏதோ ஒரு தாளகதியில் இசை மீட்டுகின்றன நூற்றுக்கணக்கான உளிகள். தாமரைப்பூ சரஸ்வதி, காசுகளை அள்ளி இறைக்கும் லட்சுமி, ரதி, மன்மதன், திருப்பதி வெங்கடாசலபதி, ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி தெய்வானையோடு முருகன், ஊழித்தாண்டவமாடும் நடராசர் என பஞ்சலோக மற்றும் வெண்கல வடிவங்களில் மினி தேவலோகச் சூழல்! இந்தியாவின் சார்பாக லண்டன், ஜெர்மனி, ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து சிற்பக் கண்காட்சிகளில் கலந்துகொள்ள மத்திய அரசு தேர்ந்தெடுப்பது இவரைத்தான். பிரான்ஸ் நாட்டுப் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பில் பாடமாக சிற்பி ராஜனின் வாழ்க்கைக் குறிப்பு இடம்பெற்றிருக்கிறது.



இவற்றைத் தாண்டியும் ராஜனுக்கு இருக்கிறது சில தனிச் சிறப்புகள். சுவாமி சிலைகளைத் தெய்வாம்சமாக வடித்துத் தரும் ராஜன், ஒரு பழுத்த நாத்திகவாதி. பெரியார் கொள்கைகளுக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர். இவரது சிற்ப மையத்தின் இன்னொரு சிறப்பு தலித் சிற்பிகள்! தாழ்த்தப்பட்டவர்கள் என ஒதுக்கப்படும் தலித்களால் உருவாக்கப்பட்ட எண்ணிலடங்கா கடவுள் சிலைகள் இந்தியாவைத் தாண்டி உலகெங்கிலும் உள்ள முக்கியக் கோயில்களில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றன. புரொஃபஷனல் கலைக்கூடம், லேப்-டாப் மூலம் வாடிக்கையாளர்களுடன் தகவல் பரிமாற்றம் என சிற்பக் கலையை அடுத்த நூற்றாண்டுக்குக் கை பிடித்து அழைத்துச் செல்கிறார் ராஜன். கலவையான உலோக மணம் நாசியைத் தீண்ட அங்கிருந்த வித்தியாசமான 'பறையடிக்கும் விநாயகர்' என்னோடு நின்றிருந்த வின்சென்ட்டின் கேமராவை ஈர்த்தது.

''அனைவருக்கும் பொதுவான கடவுள், தலித் மக்களின் கலாசாரத்தையும் பிரதிபலிக்க வேண்டும் இல்லையா? அதற்காகத்தான் இந்தப் பறையடிக்கும் விநாயகர் சிலை! பதின்மூன்று வயதிலிருந்தே கடவுள் மறுப்பாளனாக இருந்தாலும், எனக்கிருந்த சிற்பக் கலைநயத்தைக் கடவுள் சிலை செய்வதன் மூலம்தான் ஆழமாக வெளிப்படுத்த முடியும் என்று நம்பினேன். வெறும் கல்லை, உலோகத்தை கலைநயம்மிக்க கடவுளர்களாகத் தங்கள் உழைப்பின் மூலம் உருவாக்கித் தரும் மக்களைக் கோயிலின் உள்ளேயே விட மறுப்பது மானுட விரோதம் இல்லையா? பெரியார் தொண்டனாக இதற்கு நான் ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்? மூலவர் சிலைகளையே தலித்துக்களைக்கொண்டு உருவாக்கி கோயில் கருவறைக்குள் வைக்கத் தீர்மானித்தேன். சிற்பக்கலையில் ஆர்வமுள்ள தலித் இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு இலவசமாகத் தங்குமிடம், பயிற்சிகள் அளித்து என் சிற்ப மையத்தைக் குருகுலமாகவே மாற்றினேன். எதிர்பார்த்ததை விடவும் இந்த முயற்சிக்குக் கடும் எதிர்ப்புகள். 'சாமி சிலையைக் கீழ்ச் சாதியினர் செய்வதா?' என்று கேள்வி எழுப்பியவர்கள் எல்லாம் அவர்களால் உருவாக்கப்பட்ட கலைநயம்மிக்க கடவுள் சிலைகளைப் பார்த்து அசந்து போனார்கள். ஆரம்ப காலங்களில் கோயில் நிர்வாகிகள் தலித்து களால் உருவாக்கப்பட்ட கடவுள் சிலைகளை வாங்க மறுத்தார்கள். கடைசியில் அவர்களைக் கலை வென்றது. அந்த அளவுக்கு தலித் இளைஞர்களின் சிற்ப நுட்பம் ஒவ்வொரு அங்குலத்திலும் வெளிப்பட்டது.

இந்த நாட்டின் ஆதிக்குடிகள் தலித்துகள். நமக்கான கலையை, நாகரிகத்தை உருவாக்கித் தந்தவர்கள். சாமி சிற்பங்கள் மட்டும் அந்தக் கலைக்குடிகளின் கரங்களிலிருந்து தப்ப முடியுமா? எனது சிற்ப மையத்தில் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் நியூ ஜெர்ஸி சிவன் கோயில், க்ளீவ்லேண்டிலுள்ள இந்து மிஷன் கோயில்களை அலங்கரிக்கின்றன. இதே சுவாமிமலைக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள ஐயப்பன் சிலையை நானும் எனது மாணவர்களும்தான் உருவாக்கினோம். அதன்பிறகு, அந்த ஐயப்பன் சிலைக்கு வெள்ளிக் கவசம் வேண்டுமென கோயில் நிர்வாகத்தினர் கேட்டனர். கவசத்துக்கு அளவெடுக்க வேண்டுமானால் கருவறைக்குச் செல்ல வேண்டும். ஆனால், கோயில் நிர்வாகம் என்னையும் எனது தலித் மாணவர்களையும் கருவறைக்குள் விடாமல் தடுத்தது. கோபப்பட்டு திரும்பிவந்துவிட்டோம். பிறகு, அவர்களே தேடிவந்து அழைத்ததால் அளவெடுத்துக் கவசம் சாத்தினோம்.

அவ்வளவு ஏன்..? காஞ்சி சங்கரமடத்தில் உள்ள காமாட்சி அம்மனின் அவதாரமாகிய மகாமேரு சிலையை உருவாக்கியவர்களும் என் தலித் மாணவர்கள்தான்'' என்கிற ராஜனும், அவரது மாணவர்களும் இதுவரைக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட சாமி சிலைகளை உருவாக்கி உள்ளனர்.

சுவாமிமலையில் இயங்கும் சிற்ப மையத்தை அண்மையில் விற்றுவிட்டார் ராஜன். அதை வாங்கியவர்கள், 'ராஜன் சிற்ப மையம்' என்ற பெயரையே தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள ஒரு பெரும் தொகையை ராயல்டியாக வழங்கியுள்ளனர். இப்போது கும்பகோணம் அருகே ஆலங்குடியில் பரந்துவிரிந்த பிரமாண்ட சிற்ப மையத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். ''அங்கும் தலித் இளைஞர்களுக்கே முன்னுரிமை'' எனும் ராஜன் சிற்பக் கலையின் மீதுள்ள ஈடுபாடு காரணமாகத் திருமணமே செய்துகொள்ளவில்லை.

ராஜனின் சீடரான சிற்பி பாண்டுரங்கன், ''ஒளிவுமறைவின்றி சிற்பக் கலையின் ரகசிய நுட்பங்கள் அனைத்தையும் ராஜன் ஐயாதான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். வருமானம், வெளிநாட்டுக்காரர்களின் பாராட்டுக்கள் பெரிய விஷயமில்லை. உள்ளூரிலேயே சாதியின் பெயரைச் சொல்லி எங்களை ஒதுக்கியவர்கள்கூட இன்று மரியாதையோடு பார்க்கிறார்கள்.'' ஏழரை அடி உயரமும் நானூறு கிலோ எடையும் கொண்ட லட்சுமி சிலையை உயிரோட்டமாகச் செதுக்கி யபடியே பேசுகிறார்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இறுகி கெட்டிப்பட்டுக் கிடக்கும் சாதி என்னும் கடும்பாறையின் மீது ராஜனின் உளி தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருக்கிறது!

நன்றி - ஆனந்த விகடன்...

No comments: